CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Friday 2 September 2016

our article in minnambalam.com

டாக்டர் சுனில் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் உதவியுடன் நாச்சியாள் சுகந்தி
பெண்களை பொதுவெளியில் சம உரிமையுடனும், சம அந்தஸ்துடனும் இந்த சமூகம் நடத்துவதுபோல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்லூரிக்கு செல்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள். எனவே, பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைத்துவிட்டது என அரசும், சமூகமும் மாறி மாறிச் சொல்லி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘அதிக அளவிலான பெண்கள் உயர்கல்விக்குச் செல்வது, என்னுடைய தலைமையிலான ஆட்சியில்தான் அதிகரித்து வந்துள்ளது’ என பெருமை பொங்க சட்டமன்றத்தில் கூறினார். ஆனால், அவர் பெருமையுடன் சொன்ன 48 மணி நேரத்துக்குள் தமிழகத்தின் தென்முனை கன்னியாகுமரியில் ஒரு ஆசிரியை பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் வீட்டுக்குள் வைத்து ஒரு பெண் கொல்லப்பட்டார். கரூரில் கல்லூரி மாணவியை வகுப்பறைக்குள் புகுந்து, கட்டையால் அடித்துள்ளனர்.

பெண் முன்னேற்றம் அதிகளவில் உள்ளது என்று கூறப்படும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் சவாலாகவும் உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை ஏற்படுத்திய பதற்றம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி அடங்குவதற்குள் விழுப்புரத்தில் நந்தினி என்ற பள்ளி மாணவி வீட்டுக்குள்ளேயே எரித்துக் கொல்லப்பட்டாள் என்பது பெண்களுக்கு மட்டும் துயரம் தரும் சம்பவம் மட்டுமல்ல; மொத்த சமூகத்துக்கும் பெரும் துயரைத் தரும் சம்பவம்தான். இவை துயரையும் துன்பத்தையும் மட்டும் ஒவ்வொரு மனத்திலும் விதைத்துவிட்டுச் செல்வதில்லை. ஒரு சமூகத்துக்கான பெரிய இழிவையும் உண்டாக்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. இந்த இழிவுக்குச் சட்டம் ஒழுங்கு மட்டுமா காரணம்?

சமூகத்தின் அழிந்துவரும் வாழ்வியல் மதிப்பீடுகள் காரணமா? ஆண் மனதில் நிலவும் ஆணாதிக்க மனோபாவம் காரணமா? அல்லது நம் ஆண் குழந்தைகளிடம் பெண் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாது காரணமா? இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இதற்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை எளிதாக சுட்டிக்காட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க போக முடியாது. காரணம், ‘இன்றைய இளைய சமூகத்துக்கு காதல் - ஹார்மோன் - ஆசை - நிறைவேறுதல் - மறுப்பு - வெறி - கொலை என ஒரு சங்கிலித் தொடர் போல் ஒரு செயல் நடைபெறும்போது, அந்த சங்கிலித் தொடரில் ஒரு புள்ளியையோ அல்லது அனைத்துப் புள்ளிகளையோ சரியாகக் கோர்க்கத் தெரியாத அளவுக்கு இளைய சமூகத்தை உருவாக்கிய குற்றத்தில் பெரும்பங்கு அம்மா, அப்பா, உறவுகள், ஆசிரியர், மதம், ஊர், சினிமா, நாடகம் உள்ளிட்ட கலை, பொருளாதாரம் என அனைத்துக்கும் சரியளவிலான பங்கு இருக்கிறது’ என்கிறார் ‘மைன்ட் ஸோன்’ நிறுவனரும் மருத்துவ உளவியல் நிபுணருமான டாக்டர் சுனில்.

கரூரில் சோனாலி என்ற மாணவியைக் கட்டையால் அடித்துக் கொன்ற குற்றவாளி உதயகுமார் தன் வாக்குமூலத்தில் கூறுகையில், ‘அவள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்கிற பயத்தில் அவளைக் கொன்றேன்’ என்று கூறியுள்ளான். விழுப்புரம் நவீனா கொலையாளியும் இதே காரணத்தைத்தான் சொன்னான். அதாவது, ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தன் காதலைக் கூறுகிறான். உடனே அந்த பெண் தனக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ விருப்பத்தை சொன்னவனிடம் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண் எதிர்பார்க்கிறான். ஆனால், அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கருணையின்றி அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் துணிகிறான். இந்த உளவியியல்தான் தற்போது நடைபெற்ற அனைத்து கொலைகளின் பின்னணியாக இருக்கின்றன.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு காதல் என்றால் என்ன என்பதை இந்த சமூகமோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ, உறவுகளோ, கலைப்படைப்புகளோ சரியாகச் சொல்லி புரிய வைத்திருக்கிறதா என்றால், நிச்சயம் அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. ‘அந்த புரிதலை ஏற்படுத்தத் தவறிய காரணத்தினால்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறையும் கொலை தாக்குதலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.

ஆனால், நம் கலாச்சாரத்தில் பெண்ணை தெய்வம் என்கிறோம். காதலும் வீரமும் நிறைந்த சமூகம், தமிழ்ச் சமூகம் என்கிறோம். ஆனால், காதலை ஏற்காத பெண்ணைக் கொல்வதையா வீரம் என்கிறோம்? ஒரு ஆணின் வீரம், ஒரு பெண்ணை அடைவதிலா இருக்கிறது? என்ற கேள்விக்கு, உலகம் முழுக்க ஆணின் லட்சியம் பெண் என்பதே பதிலாக இருக்கிறது.
‘வேட்டை சமூகத்தில்தான் விரும்பிய பறவையை, விலங்கினை தன் இஷ்டத்துக்கு வேட்டையாடி, புசித்து, கொண்டாடி வாழ்ந்த ஆதி மனிதனின் மரபணு இன்னமும் நவநாகரீக ஆணாகக் கருதப்படும் இன்றைய ஆண்ட்ராய்டு - ஐபோன் யுக ஆண்களிடமும் இருக்கிறது. அந்த வேட்டை மனோபாவத்துடன்தான் ஆண் இன்னமும் பெண்ணை அணுகுகிறான்’ என்கிறார் டாக்டர் சுனில். இந்த வேட்டை மனோபாவம், பெண்ணையும் வேட்டைப் பொருளாகப் பார்க்க வைக்கிறது. பார்வை இச்சையாக மாறுகிறது. தன் இச்சைக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்காவிட்டால், மனம் கொடூரமாக மாறுகிறது.

‘ஆணின் மனம், பெண்ணின் மனதைப் போல், உளவியல் ரீதியாக கருணை நிறைந்தது கிடையாது’ என்கிறார் மருத்துவர் சுனில். அப்படியானால், இந்த ஆணின் வேட்டை மனதுக்கு பெண்கள் பலியாகிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழும். இதற்குத் தீர்வே கிடையாதா? இந்த நவீன சமூகத்தில் ஆண் மனதை மாற்ற இயலாதா? என்று நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நாளை விடை காண்போம்.
அதற்கு முன்பு, வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைகளிடம் காதல், அன்பு, அன்பு பரிமாற்றம் குறித்து மனம்விட்டுப் பேசுங்கள் பெற்றோரே… ஆசிரியர்களே! நீங்கள் மனம் திறந்து பேசாவிட்டால், குற்றத்தைச் செய்யும் குற்றவாளிக்கு மறைமுகமாக உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்ய வேண்டுமா? யோசியுங்கள்!

https://minnambalam.com/k/1472668229www.mindzone.in


No comments:

Post a Comment