CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Saturday 10 September 2016

World Suicide Prevention Day

’சொல்றவன் செய்ய மாட்டான்னு அலட்சியம் வேண்டாம்’ - தற்கொலை தடுப்பு நாள்
www.mindzone.inwww.mindzone.in


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்கொலை என்பது தடுக்கக் கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும்.
உலக தற்கொலை தடுப்பு தினம் முதன்முதலாக 2000ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.


உலகின் ஏதொவொரு மூலையில் உள்ள ஒருவர் தற்கொலைக்கு ஒவ்வொரு நிமிடமும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ‘மைண்ட் ஸோன்’ உளவியல் கிளிக்னிக்கின் நிறுவனர் டாக்டர் சுனில். ‘ஒவ்வொரு நான்கு நொடிக்கும் ஒருமுறை தற்கொலை நடக்கிறது. தன் வாழ்நாளில் தற்கொலையைப் பற்றி யோசிக்காத மனிதர்கள் மிகக் குறைவு. தற்கொலை என்பது ஒருவகை மனநோயின் வெளிபாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்னை. தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று ஒற்றைக் காரணத்தை வரையறுத்துக் கூற முடியாது. குடும்ப வன்முறைகள், உறவுச் சிக்கல்கள், காதல் தோல்வி, நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்கிற விரக்தி மனப்பான்மை, மதுபோதை, சிதையும் குடும்ப அமைப்பு என பல காரணங்கள் உள்ளன. இந்தியா போன்ற நாட்டில் அரசியல், பொருளாதாரக் காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது மிகவும் கவலையடைக் கூடிய விஷயம்.
ஒரு தனிமனிதன் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள தற்கொலை செய்துகொள்கிறான். நான் இந்தத் தவறை செய்து விட்டேன். அதனால் இதிலிருந்து எனக்கு தண்டனை வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உண்டு. உதாரணமாக தமிழகத்தில் முத்துக்குமார், செங்கொடியின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அரசியல் காரணக்களுக்காக செய்யப்பட்ட தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ’நான் எவ்வளவு நல்லவன்னு அவங்க புரிஞ்சக்கணும்’ என்று ஒரு விஷயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. மனதளவில் ஏற்படும் மாற்றங்கள். குறிப்பாக அதீத வேதனை, நோயின் வலியை தாங்க முடியாமை, தொழிலில் ஏற்படும் தோல்வி என Mood regulation காரணமாகத் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.
சமூகக் காரணம் என்று பார்க்கும்போது மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலாத நபர் தற்கொலைக்கு முயல்கிறார். பெருகிவரும் போட்டிக்கு ஏற்ப தன்னை உயர்த்திக்கொள்ள இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு. இப்படி ஒருவன் தற்கொலைக்குப் பின்னால், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்ற காரணங்கள் இருந்தாலும், தனிமனிதனுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. தீராத மன அழுத்தம் சீசோபெர்னியா எனும் மனநோய் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்கிறார் டாக்டர் சுனில்.
இது குறித்து டாக்டர் ஜெயசுதா காமராஜ் கூறுகையில், ‘பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்பவர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள். ஆனால், உண்மை அதற்கு மாறானது. பதினைந்து முறை தற்கொலைக்கு முயன்றவர், இறுதியில் ஒரு முயற்சியில் வெற்றி பெற்று இறந்து விடுகிறார். அதேபோல் பெண்கள்தான் அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வார்கள். ஆனால், அதை நிறைவு செய்ய மாட்டார்கள். குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்குப் பின்னால் பல சமூகக் காரணங்கள் உள்ளன. அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது ஆண்கள்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். குடும்பத்தில் இதற்கு முன்பு வேறு யாரேனும் தற்கொலை செய்து கொண்டிருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வரும். இப்படியான எண்ணம் வரும்போதே அதை மனநல அவசரம் என்று கருதி தகுந்த மனநல மருத்துவரை அணுகுவதுதான் இந்த பிரச்னையைத் தடுக்க உதவும். மிக முக்கியமாக வீட்டில் யாரேனும் நீண்ட நாட்களுக்கு சோகத்துடனும் தனிமையிலும் உழன்று வந்தால் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களை பேச அனுமதிக்க வேண்டும். நாம் அட்வைஸ் செய்கிறோம் என்கிற பெயரில் நீண்ட லெக்சர் தரக்கூடாது என்கிறார்’ டாக்டர் ஜெயசுதா.

‘குறிப்பாக சட்டென முடிவெடுக்கும் இளைஞர்களிடத்தில் உஷாராக இருக்க வேண்டும். மது குடித்துவிட்டு தற்கொலை பற்றிப் பேசுகிறவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்களது பேச்சைக் கவனிப்பது முக்கியம்’ என்கிறார் ஜெயசுதா. இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியம், ஒவ்வொருவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். அன்பும் பரிவும் மட்டுமே தற்கொலையைத் தடுக்கும்.

No comments:

Post a Comment