CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Wednesday, 6 December 2017

Manam Yennum Mayakkannai - Part - 9 (Article in Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 9

விஸ்வநாதனைச் சந்தித்த முதல் நொடி அவரின் கூச்ச சுவாபம்தான் என் கண்ணிலும் புத்தியிலும் உடனடியாக அவரைப் பற்றி பதிந்த அபிப்பிராயங்கள். விஸ்வம் ஒரு கோயில் பூசாரி. மிகவும் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து குலப்பெருமையைக் காப்பதே வாழ்க்கை என்று நினைக்கும் ஒருவராகவே விஸ்வம் இருந்திருக்கிறார். பதின்ம வயது சுய கட்டுப்பாட்டு கோட்பாடுகளில் ஒன்றாக அவருக்குப் பெண்கள் மீது எந்தவித பாலியல் ஈடுபாடும் வந்துவிடக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்று.
அதன்படியே அவரது வாழ்க்கையும் நகர்ந்தது. பெண்பால் ஏற்படும் இயற்கையான ஈடுபாடு தவறு என்றே நினைக்கிறார். விரும்பியபடியே கோயில் பூசாரியாக ஆகிறார். அதன்பிறகு, வாழ்க்கை நன்றாக தான் போகிறது. வாழ்க்கையில் கச்சிதமான வழிநெறிகள் தவறாத மனிதராக (பர்ஃபெக்ஷ்னிஸ்டாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். யார் மனதையும் எந்தக் காலகட்டத்திலும் காயப்படுத்தக் கூடாது. அதேபோல் எந்த பெண்ணையாவது பார்த்தது யாருக்காவது தெரிந்து விட்டால் அது தனக்கும் தன் குலத்துக்கும் அவமானம் என நினைத்தார்.
என்ன தான் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் நம்மை ஆள செய்தாலும் மனம் என்பது தன் போக்கில் இயற்கை உந்துதலின் வழியே செல்லும். அந்த வயதிற்கு இயல்பாக இருக்கக் கூடிய இச்சைகளை மனதும் உடலும் நிராகரிக்காது. அப்படி நிராகரித்து விட்டதாக சொல்வது போலியானது. ஆனால், சமூகம் கட்டமைத்த போலியான கோட்பாடுகளாலும் உடல் என்பதை அசிங்கத்தின் தொடர்ச்சியாக பார்க்கும் மனநிலையின் நீட்சியாகவும் நம் போலிகளையே நிஜமென நம்புகிறோம். அப்படியான மனநிலைக்குத்தான் விஸ்வமும் தள்ளப்பட்டார்.

எப்போது இதுபோன்ற உணர்வுகளை அடக்கி வைத்தோ, மறுதலித்தோ வாழ்ந்தால் அது தன் இயற்கையான வழியை தானே கண்டடையும். இது தான் நியதி. இப்போது தான் விஸ்வத்துக்கு தன் நடவடிக்கை குறித்து நிறைய கேள்விகள் வந்தன. அடிக்கடி குளிக்க ஆரம்பித்தார். அவர் குளித்து கிளம்பி பாதி தூரம் கோயிலுக்குப் போகும் பாதையில் பின்பு திரும்ப வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து கிளம்புவார். குளிப்பதும் நாம் ஒற்றை வார்த்தையில் சொல்வது போல சாதாரணக் குளியல் இல்லை. சோப்பைப் போட்டு தேய்த்து, பின் தேய்த்து தேய்த்து, தேய்த்தான குளியல். அவரது தோலே நிறம் மாறி போகும் அளவுக்கான குளியல் அது. அப்போது தான் தனக்கு மனநல ஆதரவு தேவை என்று கருதி சிகிச்சை எடுக்க முன்வருகிறார்.
மனநல மருத்துவர்களிடம் தன் நிலையை சொல்பவரால் எல்லாமே மனம்விட்டு சொல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அது குறித்த அவரது கோட்பாட்டு விழுமியங்கள் வேறாக இருந்தன. பேசப் பேசவே தன் மனதின் இடுக்குகளில் சிக்கிக்கிடந்த ரகசியத்தை பகிர்கிறார். அதன்படி அவருக்கு அம்பாளின் மேல் பெரும் பிரேமம் இருக்கிறது. அம்பாளுக்கு உடை மாற்றும்போதும் பூஜைக்கு தயார் செய்யும் போதும் இந்த நினைவு கசடாய் வந்து நிற்க அவரால் தான் கறைப்பட்டு விட்டோம் என்ற நினைவை தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதன் காரணமே அவர் அடிக்கடி குளிக்க ஆரம்பிப்பது. பூலோகப் பெண்களையே நினைத்து பார்க்கக் கூடாதென நினைக்கும் என்னை இப்படி அம்பாளையே தவறாய் நினைக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது என்ன? எது என்னை இந்த தீய எண்ணத்திலிருந்து மீட்கும்? எது என்னை புனிதப்படுத்தும் என்ற சுயபோராட்டத்தின் விடையே அந்த குளியல்.
நம் சமூகத்தில் பொதுவாகவே கச்சிதமாக வாழ்பவர்களாக இருப்பவர்கள் எல்லாமே அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். கச்சிதம் என்று ஒன்றும் இல்லை. அதை யார் நிர்ணயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் கோட்பாடுகள் அமையும். அது சாதி, மதம் பிராந்தியம் சமபந்தமான நீட்சிகள் உடையது. அதன்படி வாழ்வதென்பது உலகப்பிராகரமாக முடியாத காரியம். அதனால் யதார்த்த வாழ்வில் முரண்பட்டு இக்கச்சிதங்கள் சிதையும்போது மனச்சிதைவும் அழுத்தங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருகின்றன. மன அழுத்தம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனதையும் உடலையும் அழிக்க கூடிய விஷயமே கச்சித தன்மை என்பது ஓர் உன்னதம் இல்லை. அது ஒரு குறைபாடே. அதேபோல் அது ஒரு நோயாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். காரணம், நாம் அப்பழுக்கற்ற வாழ்வியல் முறையை கடைப்பிடிக்கும்போது மற்றவர்களின் குறைகள் அதிகமாக தெரிய வருகின்றன. அதன் பொருட்டே நாமும் குறைகளற்ற கச்சிதமான மனிதர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அதிகமாகிறது.

அப்படி யதார்த்த வாழ்வில் இருக்கவிடாமல் செய்யும்போது மிக அதிகமான மனசிக்கல்கள் ஏற்பட்டு எண்ண சுழற்சி நோய்க்கு (obsessive compulsive disorder) ஆளாகிறார்கள். விஸ்வத்துக்கும் இதே பிரச்னை தான்.
அம்பாளுடன் தனக்கு இப்படியான எண்ணங்கள் வருவதே தன்னாலேயே சகித்துக்கொள்ள முடியாத சூழலில் மீண்டும் மீண்டும் குளித்து அவரால் கோயில் வேலைகளிலேயே ஈடுபட முடியாமல் போய் விட்டது. எண்ண சுழற்சி நோயை மனித மனதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்யும் எண்ணங்களை அது தொடர்ச்சியாக ஏற்படுத்திய வண்ணமே இருக்கும். நோயாளியின் அன்றாட வாழ்வியியலே பாதிக்கப்படும் என்பது விஸ்வத்தின் வாழ்வை முன்வைத்தே புரிந்து கொள்ளக் கூடியது. ஷேக்ஸ்பியரின் ‘லேடி மேக்பத்’ கையில் ரத்தக் கறை இருப்பது போல் புலம்பிக்கொண்டு கைகளை கழுவிக்கொண்டே ‘அரேபிய நறுமணப் பொருட்களும் என்னை மீட்காது’ என்று சொல்வதன் அடையாளமும் இந்த நோயே..
இது அபத்தம் என்று தோன்றினாலும் அவர்களால் அதை விட்டொழிக்க முடியாது. சில விஷயங்களை அவர்கள் சடங்கு மாதிரி செய்வார்கள். பத்து தடவை சாமி கும்பிடுவது மாதிரியான விஷயங்கள் இதன் வெளிப்பாடே. யதார்த்தமான உடல் தேவைகளை புறந்தள்ளாமல் அதைப் புரிந்துக்கொண்டு கச்சிதங்களுள் சிக்காமல் வாழ்வதே மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க வைக்கும்.
யாரையும், யார் வாழ்வையும் சில நேரம் துலாபாரக் கோல்களோடு நாம் மதீப்பீடு செய்ய முடியாது. ஆனால், நாம் நம் விழுமியங்களை முன் வைத்து அதை செய்தபடியே இருக்கிறோம். வாழ்வின் மிகப் பெரிய விடுதலையே கச்சிதமான விழுமியங்களிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்வதே. அதை புரியவைத்த பிறகு விஸ்வமும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

Dr. Sunil Kumar                                                            Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                                     counselling psychologist
Founder- Mind Zone                                                      co-founder, Mind Zone
Call: 9444297058                                                           Call: 9176055660

No comments:

Post a Comment