CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Tuesday, 7 November 2017

Manam yennum Mayyakkannadi - Article No. 4 (Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 4

மனநலம் பாதிப்படைந்தவர்களின் கதைகளைக் கேட்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது. அன்பையும் கவன ஈர்ப்பையும் அவர்கள் பெறவே பல நேரங்களில் அவர்கள் மனநோயாளியாகும் தருணங்கள் வாய்க்கின்றனவோ என நினைக்கிறேன். நான் சந்தித்த சொர்ணா என்னும் பெண் பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள். அவளது நீண்ட காலப் பிரச்னையாக வயிற்றுவலியும் மூக்கிலிருந்து ரத்தம் வருவதுமாக இருந்தது.
பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தபோதும் தீரவில்லை. கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி மருத்துவர் சொன்னது என்னவெனில்... குடல் அழற்சி நோயாக இருக்கும் வாய்ப்புள்ளது. ஆபரேஷன் செய்தும் வலி தீரவில்லை. அதற்குள்ளாகவே மருத்துவச் செலவு இரண்டு லட்சம் தாண்டி செலவாகி இருந்தது. அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டிருப்பது நிஜமான உடல் வலியல்ல. அது ஒரு மனரீதியிலான சிக்கல் ஏற்படுத்தும் நோய் என்று மருத்துவரே ஒரு மனநல ஆலோசகரைச் சென்று சந்திக்கப் பரிந்துரைக்கிறார்
மனநல ஆலோசகர்கள் அவளிடம் பேசும்போதுதான் வலிக்குப் பின்னால் இருந்த அவளது மன சிக்கல் புலப்பட்டது. அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவள் அப்பா இறந்து போகிறார். அதுவரை மிக மகிழ்ச்சியான குடும்பமாக இருந்த குடும்பம் பெரிய பொருளாதாரப் பின்னடைவை எட்டுகிறது. இவள் ஒரே பெண். அம்மா ஹோட்டல் ஒன்றில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேலைக்கு சேர்கிறார். காலையில் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பினார் என்றால் வீடு திரும்புவதற்கு எப்படியும் இரவு ஒன்பது மணியாகி விடும். பெரும்பான்மையான நேரங்கள் இவள் தனிமையிலேயே இருந்தாள்.

அவளது உடன் படிக்கும் மாணவர்களின் அப்பாக்கள் பள்ளிக்கூடம் வந்து விட்டுப் போகும்போதான வெறுமை அவளை மிகவும் பாதித்தது. கூடவே சக தோழிகளுக்கு நிகரான வீடு தனக்கில்லை. ஆடை வகைகள் இல்லை. மேக்கப் சாதனங்கள் இல்லை என்பதெல்லாம் அவள் ஆழ்மனதின் குறைபாடுகளாக பதிகின்றன. இக்காலகட்டத்தில் இவளின் தனிமையை பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களே இவளை தவறுதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இயல்பாகவே தந்தையை இழந்து அதனால் குடும்ப பிணைப்புக்கான இழை அறுந்து, வேலை நிமித்தம் அம்மாவும் அதிகமாக நேரம் ஒதுக்க முயலாதபோது அவளுக்குத் தேவைப்பட்ட அன்பை, ஆறுதலை தர முன்வந்தவர்களே இவர்கள். அம்மா வேலை முடிந்து ஒரு நாளின் இறுதியில் வந்தால் சோர்ந்து படுத்து விடுவாள். சில நேரம் அயர்வின் கோபம் அவளிடம் ஒட்டியிருக்கும். இவளது வெற்றிடத்தை பள்ளி ஆசிரியரிடம் பேச பேச அவர் ஆறுதலாக தொடங்கி பாலியல் வன்முறையில் முடித்து வைத்தார். ஐந்தாம் ஆறாம் வகுப்புகளுக்குள்ளாகவே பலர் அவளைப் பயன்படுத்தியிருந்தனர்.
அம்மா வேலை பார்க்கும் ஹோட்டலின் முதலாளி முதல் பள்ளிக்கூட ஆசிரியர் வரையிலுமே அவளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்திருக்கின்றனர். பிறகாக அவள் யாரிடமும் இதைப் பற்றி மனம்விட்டு தன் வலி வேதனையைப் பேச தயங்குகிறாள். மற்றவர்களும் தன்னிடம் தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சம் அவளுள் இருக்கிறது.
ஒருபக்கம் தான் நேசித்தவர்கள் எப்போதுமே தன்னுடன் இருக்காத வாழ்க்கை. ஒன்று அவர்கள் விட்டுப் போய் விடுவார்கள். அல்லாது இறந்து போய் விடுவார்கள் அல்லது தன்னை பயன்படுத்தி விட்டு விலகி விடுவார்கள் என்ற எண்ணம். ஆனால், அதேநேரம் மனம் ஆறுதலை, அன்பை, அணைப்பின் கதகதப்பை நாடியே உள்ளது.
இந்த உள்மனப் பிரச்னை யாருக்குமே தெரியவில்லை. கண்ணுக்கு முன் அவள் பாதிக்கப்பட்டிருந்தது வயிற்று வலியாலும் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுதலாலும் மட்டுமே. அம்மா பயந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் இவளை அழைத்து செல்கிறாள். மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள். மருத்துவ சோதனைகள் என்று அம்மாவுடன் நேரம் செலவழிக்க ஆரம்பிக்கிறாள். இது அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட ஆறுதலைத் தருகிறது வயிற்று வலியும் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதும் அம்மாவின் குணாதிசயத்தை மாற்றியிருந்தது. எப்போதும் கோபப்படும் அம்மா இவளிடம் பாசமாக நடந்து கொண்டார். இவளுக்காக அம்மா அளவில்லாத பணம் செலவழித்தார். எப்போதும் இவளுடனே படுத்து நெற்றி வருடி விட ஆரம்பிக்கிறார். விடுமுறை எடுத்து இவளுடன் நேரம் செலவழித்தார். இவையெல்லாம் அவளிடம் ஓர் ஆறுதல் நிலையை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் நிலை லாபம் ஒன்றை இந்த உடல்நலக்கோளாறில் அவள் கண்டுபிடித்து விடுகிறாள். அது அவள் மனதுக்கு மிக தேவையாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை இந்த நோயை வைத்து தான் சாதித்தாள். இந்நோய்க்கு எவ்வளவு மாத்திரை கொடுத்தாலும் அறுவை சிகிச்சையே செய்தாலும் இது தீராது. ஏனெனில் அதன் நோக்கம் / உள்நோக்கம் இரண்டுமே வேறு வேறாக உள்ளன. இந்த வலி எல்லாமே அவளது உளவியல் சார்ந்த அசாதாரண வலியாக அடையாளப்படுத்தினர்.

ஆங்கிலத்தில் இதை psychogenic  pain என்று சொல்வார்கள். உடல் தன் மனதுக்கு ஒப்பாததை வலியின் மூலமாக வெளிக்காட்டுவது. பரீட்சை சமயம் சிலருக்குக் காய்ச்சல் வரும். தலைவலி வரும். இதைப் பரீட்சை செய்து பார்த்தோமானால் உடலளவில் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.
மனதளவில் நாம் சில பிரச்னைகளை முன் வைக்கும்போது அதற்கு மரியாதை இல்லை. இச்சமூகத்தில் மனதுக்குப் பெரிய மரியாதை இல்லை. ஒரு குழந்தை இன்று பள்ளிக்கு செல்லவில்லை என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அதே சமயம் அப்பெற்றோர் அக்குழந்தை நெஞ்சு வலி என்று சொல்லுமானால் அதற்காக துடிப்பார்கள். உடலுக்கு அதீத கவனம் கிடைப்பதால் மனதின் கவனஈர்ப்பை உடல்வழி மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார்கள். சைக்கோ - சோமாடிக் வியாதியின் முக்கிய பண்பே இவ்விதமான அறிகுறிகள் தான்.
கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் இவை. கவன ஈர்ப்பு என்பது தவறான சொல் அல்ல. இதுபோன்ற மனம் சார்ந்த வியாதிகளுக்கு அறிகுறிகள் இருக்கும். பரீட்சைக் காரணமாகக் காய்ச்சல் என்றால் காய்ச்சலின் சூடு இருக்கும். ஆனால், காய்ச்சலுக்கான கிருமி தென்படாது. ஏதோ ஒன்று பிடிக்காததால் தலைவலி வரும். ஆனால், அந்த தலைவலி மாத்திரையால் தீராது.
இவளின் வயிற்று வலியே அவள் தான் கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். மூக்கை இவளே குத்தி ரத்தம் வருமளவுக்கு காயம் செய்துகொண்டிருக்கிறாள் என்று மனநல மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து வயிற்றுவலியால் அம்மாவின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் உடனே மூக்கைக் காயப்படுத்தி ரத்தம் வர செய்து கைக்குட்டையில் துடைத்து அம்மாவிடம் காட்டும்போது அம்மா பதறி விடுகிறார். அந்த இதமான கவனிப்பு அவளுக்குத் தேவைப்பட்டது.
மருத்துவமனைகளுக்குப் போவது, ஹோட்டல்களில் தங்குவது / சாப்பிடுவது எல்லாமே அவளுக்குச் சுகத்தையே தந்திருக்கிறது. இது போன்ற சமயங்களில் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே முதலில் கவுன்சலிங் கொடுக்க வேண்டியிருக்கிறது. மனதுக்கும் உடலுக்குமான தொடர்பு, மனசு சரியில்லை என்றால் என்ன மாதிரியான மாயைகளுக்குள் உடல் சிக்கிக்கொள்கிறது என்பது பற்றியெல்லாம் உடனிருப்பவர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
அதேநேரம் சொர்ணா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழிகளின் வழி இந்த மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகளைக் கற்று கொடுக்க வேண்டும். மனம்விட்டு பேசாமல் இருப்பதுதான் மிகப் பெரிய பிரச்னை. தன் அம்மாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவள் நினைத்ததை அவள் பேசவேயில்லை. அதேபோல் ஆண்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் அம்மாவிடம் சொல்லவே இல்லை. இருவார மன ஆலோசனைக்குப் பிறகு இப்போது மீண்டு வருகிறாள் அவள். பாலியல் வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கு வெட்கமும் அவமானமும் அதிகமாக ஆட்கொண்டிருக்கும். அதனால் வெளியே சொல்லாமலே அதை அடைத்து வைத்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள்.
ஆசிய நாடுகளின் உள்ளார்ந்த தத்துவமே அவமானத்தைத் திணித்தபடியே செயல்படுத்தும் அடக்குமுறை என நான் படித்திருக்கிறேன். அவமான உணர்வை அடக்கி தன்னுள் வைத்திருப்பதன் முக்கிய வெளிப்பாடு தன்னைத் தானே பாதிப்புக்குள்ளாக்கிக்கொள்வதே ஆகும்.
சரியான நபர்களிடம்தான் நமக்கு தேவைப்படும் அன்பை பெறுகிறோமா என்பதில் ஆரம்பிக்கிறது இதன் சூட்சமம். இதைப் புரியவைத்து மீட்டெடுப்பதே மிக முக்கியமான விஷயம். அவளின் அம்மாவுக்குப் பணம் போகவும் மனரீதியிலான நெருக்கத்தை மகளுடன் ஏற்படுத்திக் கொள்ளவும் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் அவர்கள் பார்வையை, வாழ்வை மாற்றியது.

Dr. Sunil Kumar                                                   Dr Jayasudha Kamaraj
Clinical Psychologist                                            Counseling Psychologist
Founder - Mind Zone                                            co-founder, Mind zone

No comments:

Post a Comment