CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Tuesday 24 October 2017

psychology articles in tamil

http://minnambalam.com/k/1508178629
மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் அதன் சிக்கல்களை எளிமையாக்கி அதன் மேல் படிந்திருக்கும் சமூகக் கூச்சத்தைத் துடைத்தெறிவதே ஆகும். சமூகம் கோட்பாடுகளாய் வைத்திருக்கும் அளவீடுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் யதார்த்த வாழ்க்கை புகுத்தும் நவீன மாயத்திரைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது எல்லா வயதினருக்குமான சிக்கலாக இருக்கிறது.
மின்னணு சாதனங்களால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கை இது. அலைபேசி கொடுத்துதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறார்கள். அதிலிருக்கும் விளையாட்டுகளுக்குப் பெரியவர்களே அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் அப்படியொரு விளையாட்டுக்கு நான் அடிமையாகி வாழ்வில் ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அந்த விளையாட்டில் அன்று நான் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்குப் போதையானபோது நான் செய்த ஒன்றுதான் – அவ்விளையாட்டை என் அலைபேசியிலிருந்து நீக்கியது.
பதின்ம வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல்ரீதியிலான பாலியல் குழப்பங்களுக்கு இந்த மெய்நிகர் இணைய உலகம் விரல் பிடித்து கரடுமுரடான பாதைக்கு அழைத்து செல்கிறது. சவீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு பள்ளி மாணவி. அப்பா வெளியூரில் நல்ல வேலை பார்க்க, சென்னையில் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவும் அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவீதாவுக்கு மிக நவீனமான விலை உயர்ந்த போனை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.
சவீதாவுக்குத் தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை உண்டு. தான் குண்டாக கறுப்பாக இருப்பதாக நினைப்பதாகவும் அதனாலேயே அழகற்றவராக மற்றவர்கள் விரும்பத்தகாத பெண்ணாகவும் இருப்பதாக நினைக்கிறாள். முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கி உடலமைப்பு தெரியாமல் பல கோணங்களில் கண், காது, மூக்கை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறாள். அதற்கு கிடைக்கும் விருப்பக்குறிகள் அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. கீழே சிலர் அவளை வர்ணித்து இடும் கருத்துகள் அவள் மனதுக்கு இதமாக இருந்தன.
அவளது பள்ளியும் மிக வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. பல வெளுத்த தோல்களுக்கிடையே இவளது கறுத்த நிறத்தை கிண்டல் செய்தார்கள். இப்படியான காலகட்டங்களில் தொடர்ந்து முகநூல் கருத்துகளை வாசித்து வாசித்து தனது மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டாள் சவீதா. ஒருநாள் தற்செயலாக வீட்டு அலமாரியில் அவளைத் தத்தெடுத்தற்கான ஆவணங்களைப் பார்த்து மனமுடைந்து போகிறாள். அம்மாவிடம் மறைமுகமாக இது குறித்து பேசி காயப்படுத்துகிறாள்.

இப்போது, முகநூல் உள்டப்பில் தன்னிடம் பேசும் ஆண்களுக்கு தன் அலைபேசி எண்ணைக் கொடுக்கிறாள் அவள். அவர்களில் ஐந்து பேருக்கும் மேலே வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவளது அடுக்குமனை குடியிருப்பில் இருக்கும் மனிதர்கள் இதை அவள் அம்மாவிடம் சொல்ல உடைந்தே போகிறார் அவர். அவள் அலைபேசியை வாங்கிப் பார்த்தால் பாய் ஃப்ரெண்ட் 1 என்று ஆரம்பித்து பாய் ஃப்ரெண்ட் 40 என குறிப்பிட்டு இருக்கிறாள். எல்லோருடனும் பள்ளிக்குப் போகாமல்கூட பேசிக் கொண்டிருக்கிறாள் சவீதா. அம்மா அலைபேசியை வாங்கி பீரோவில் வைக்க அவள் வன்முறையைக் கையில் எடுக்கிறாள். அம்மிக் கல்லை வைத்து பீரோவை உடைத்து அலைபேசியை எடுக்கப் பார்க்கிறாள்.
குழந்தையின்மையை ஈடு செய்ய தத்தெடுத்த குழந்தையை, பெற்ற குழந்தையை விடவும் நன்றாக வளர்க்க வேண்டுமென்று நினைத்து சவீதா கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்த அம்மா உடைந்து போகிறார். மனநலக் காப்பகத்தின் உதவியை நாட அவர்கள் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறார்கள்.
முதல் பதினைந்து நாள்கள் மிக வன்முறையாக நடந்து கொண்டு தன்னைத் தானே கூட காயப்படுத்திக் கொண்டவளின் ஒரே கோரிக்கை அலைபேசி வேண்டும். மெல்ல மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா பேசும்போது அவள் தன்னை யாருமே அங்கீகரிக்காத ஏக்கத்தை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சவீதாவின் அம்மாவின் அம்மா சவீதாவைத் தத்தெடுப்பதை விரும்பாததினால் அவரை ஒருபோதும் தூக்கக் கூட செய்ததில்லை. அந்த நிராகரிப்பு தரும் வலி மெல்ல மெல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட்டிருக்கிறது. சவீதா எட்டு வயதில் இருக்கும்போது வீட்டுக்கு வந்த அம்மாவின் அக்கா மகன் அவளை பாலியியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான். அது பற்றி அம்மாவிடம் இவள் சொன்னபோதும் அம்மாவால் அதை வெளியே சொல்ல குடும்ப காரணங்களாலும், யாரும் விரும்பாமல் குழந்தையைத் தத்தெடுத்த காரணத்தை இப்போது பழி சொல்ல பயன்படுத்துவார்கள் என்பதாலும் அவரால் இயலவில்லை. ஒருவேளை அவனே அவளிடம் அவள் தத்தெடுத்தக் குழந்தை என்று சொல்லியிருக்கக் கூடுமென சவீதாவின் அம்மா நம்பினார்.
“நம் மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் என்னும் ஒரு பகுதி உண்டு. அது பாராட்டுகளால் தூண்டப்படும். அது ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அதை சவீதா முகநூல் கருத்துகளால் திருப்தி செய்கிறாள். நம்மில் சிலர் காபியால், இசையால், முகநூல் புகைப்படத்தால் அதை திருப்திப்படுத்துகிறோம்” என்கிறார்கள் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா.
சவீதாவுக்கான சிகிச்சை மிக முக்கியமாக அலைபேசியிலிருந்து அவரை தூரம் வைக்கும் முயற்சியாகவே இருந்தது. மேலும், அவரின் தாழ்வு மனப்பான்மையை நீர்த்துப்போக செய்யும் தன்னம்பிக்கை சார்ந்த முறைமை பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மெல்ல தான் செய்தது தவறென அவர் நினைக்க ஆரம்பித்தார். எங்களுக்கு முன்னமே அவர்கள் இருவருமே ஒளிவு மறைவு இல்லாமல் தத்தெடுத்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தோம். அது அவர்கள் உறவை இலகுவாக்கிற்று.
இந்த சமூகம் வைத்திருக்கும் சில நியதிகளை தங்கள் வாழ்வு தராசில் பலர் நிறுத்துவதேயில்லை. குழந்தையில்லை என்பதை ஒரு குற்றமாக இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டமே ஒரு மனநோய் தான். குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னமே ஏன் தத்தெடுக்க நினைக்கிறோம் என்பது பற்றிய ஒருமனோதத்துவ ஆலோசனை அவசியம் தேவை. தன்னை சிறந்த தாயாக நினைக்க வைக்க சவீதாவின் தாய் முனைய, அந்தப் பாசத்தைக்கொண்டே உணர்வு ரீதியான சுரண்டலைக் கச்சிதமாக செய்திருக்கிறார் சவீதா.
குழந்தைகள் கையில் இணையதளத்தை பரவலாக கொடுப்பது மிகத் தவறான விஷயம். அதை பல பெற்றோர்கள் இன்று தங்களை அறியாமல் செய்து வருகிறார்கள். இளவயதில் மூளை மிக லேசாக ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டு விடும். சவீதாவின் அம்மா அறியாமல் பாசம் காட்டுவதாக நினைத்த விஷயம் சவீதாவின் வாழ்வையையே திசை மாற்றி விட்டது.
மனம் பற்றி படரும் உணர்வுக் கொடிதான். நவீன சிக்கல்களின் முழுசேதாரமும் இயந்திர உலகின் மூலமான மெய்நிகர் உறவினால்தான். அன்பும் பகிர்தலுமே மனதையும் மனித வாழ்வையும் உயிர்ப்பிக்க வைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே விடுதலை நம் வசமே.


தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா - மைண்ட் ஜோன் மருத்துவமனை
எழுத்தாக்கம்: தமயந்தி

No comments:

Post a Comment