CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Monday, 2 April 2018

psychology behind foolishness

முட்டாள்தனம் குணப்படுத்த வேண்டிய கோளாறா?

முட்டாள்கள் தினத்தை ஒட்டிய சிறப்புப் பதிவு
பேனாவில் இருக்கும் மையைப் பிறரது முதுகில் தெளிப்பதும், மாட்டு வண்டிச் சக்கரத்தில் இருக்கும் உயவுப் பொருளை (Grease) பிறர் மீது தடவுவதும், ஒருகாலத்தில் முட்டாள் தினக் கொண்டாட்டங்களாக இருந்திருக்கின்றன. இதைச் செய்யாதவர்கள், ஏதேனும் ஒரு பொய்த் தகவலைக் கூறி ஏமாற்றிவிட்டு ஏப்ரல் ஃபூல் (April Fool) என்று கத்துவது வழக்கம். மாணவர்கள் மட்டுமல்ல, மக்களில் பலரும் அப்படித்தான் இருந்தார்கள்.
இப்போது நிலைமை அப்படியில்லை. நாம் ஆண்டு முழுவதும் பிறரை ஏமாற்றுகிறோம்; ஏமாறத் தயாராக இருக்கிறோம்.
அறிவீனம், மடமை, அபத்தம், மூடத்தனம், அசட்டுத்தனம், கோமாளித்தனம் என்று முட்டாள்தனம் பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இன்றைய வாட்ஸ்அப் உலகில், பெரும்பாலும் அறியாமை மட்டுமே முட்டாள்தனமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவருக்குத் தன்னைப் பற்றிய சுய அறிதல் இருக்கும்வரைக்கும், முட்டாள்தனம் என்பது அவரிடம் இருக்கும். நம்மைப் பற்றி ஒன்றும் தெரியாவிடில், நமது முட்டாள்தனம் என்னவென்பதே நமக்குத் தெரியாது. ஓர் அறிஞர் சொன்னது இது.
முட்டாள்தனம் மூன்று விதம்
எது முட்டாள்தனம் என்பது பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுவாக, முட்டாள்தனம் எதுவென்பதை வரையறுக்க மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதில் முதலாவதாக வருவது, மற்றவர்களுடன் அனுசரித்துப் போக மறுப்பது. சமூகம் வரையறுத்த விதிகளை ஒப்புக்கொள்ளாதவர்கள், எந்தக் காலத்திலும் மற்றவர்களால் விநோதமாகவே பார்க்கப்படுவார்கள். விதிவிலக்குகளை விலக்கிப் பார்க்கும் பெரும்பாலானவர்களின் பார்வையே இதற்குக் காரணம்.
இரண்டாவது, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தன்மை. மூன்றாவது, ஒருவர் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் இருப்பது அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால், இதை உளவியல்பூர்வமாகப் பார்க்காமல், வெறுமனே ஒரு கருத்தாக மட்டுமே பார்த்தார்கள்.
முட்டாள்தனத்தின் வேறு பல வகைகள்
இங்கிலாந்தில் முட்டாள்தனம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், அதைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தினர். முதலாவது, அறியாமையில் நம்பிக்கை கொள்வது (Confident Ignorance). ஆனால், அறியாமைக்கும் முட்டாள்தனத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தான் முட்டாள் என்று ஒருவர் உணர்வாரேயானால், அது முட்டாள்தனம். அதை உணரவே இல்லையெனில், அது அறியாமை. அறியாமையில் நாம் செய்யும் தவறுகள், நமது அறிவுக் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடும். இந்த அறியாமையைத்தான் சதுரங்க வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள் சில மோசடிப் பேர்வழிகள்.
அடுத்து வருவது, சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது (Lack of Control). இவ்வாறான குணாம்சம் கொண்டவர்கள் இடம், பொருள், ஏவல் தெரியாமல் வாழ்வார்கள்.
மூன்றாவது, கவனக் குறைவு அல்லது போதிய கவனம் செலுத்தாமை என்றும் சொல்லப்படும் Absent Minded. மிகப்பெரிய அறிவாளிகள்கூட, வேறொரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதன் காரணமாக, ஒரு சில அன்றாட விஷயங்களில் போதிய கவனத்தைக் காட்ட மாட்டார்கள். இவர்களது செயல்களும் பல நேரங்களில் விநோதமாகத் தெரியும். இவர்களையும், நமது சமூகம் முட்டாளாகவே பார்க்கிறது என்பது தனிக்கதை. சமீபத்தில் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தனது கட்சியைச் சேர்ந்தவரையே சிறந்த ஊழல்வாதி என்று பாராட்டினார். அதற்கும் Absent mindதான் காரணம்.
அறிவியல் காரணம்
முட்டாள்தனம் ஏன் வருகிறது என்பதனை அறிவியல்பூர்வமாகவும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். ஒருவரது முட்டாள்தனத்துக்கு மூளையின் முன்பகுதியில் (Frontal Lobe) ஏற்படும் கோளாறுகளே காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மனிதன் சிறந்த நிர்வாகியாக இருக்க, அவனது முன்மூளைதான் முக்கியக் காரணம். திட்டமிடுதல், கவனம் செலுத்துதல், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, மொழி போன்றவை சரியாகச் செயல்பட இதுவே உதவி செய்கிறது. முன்மூளையில் சேதாரமோ, சிக்கலோ உண்டாகும்போது, ஒரு மனிதனின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். முட்டாள்தனம் வெளிப்படுவதென்பது இதன் பின்விளைவுதான்.
தகவல்களை முறைப்படுத்துவது (Information Processing) மூளையின் முக்கியச் செயல்பாடாகும். நமது சிந்தனையில் மிக முக்கியமானது, நம் சிந்தனையைப் பற்றி நாமே சிந்திப்பது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், ஒரு விஷயத்தை எப்படி யோசிக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்பது (Meta Cognition). அப்போது உணரப்படும் அறிவானது, நமது முட்டாள்தனத்தை அடையாளப்படுத்தும். இந்தச் செயல்பாடு குறைவாக இருந்தாலோ, இல்லாமலிருந்தாலோ ஒருவர் அடிக்கடி முட்டாளாவார் அல்லது மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவார்.
ஆங்கிலத்தில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொலவடை இது. “ஒருவனுக்குத் தான் முட்டாள் என்று எப்போது தெரிகிறதோ, அப்போது அவன் புத்திசாலி ஆகிறான்; ஒரு புத்திசாலி எப்போது தான் புத்திசாலி என்று நினைக்கிறானோ, அப்போது அவன் முட்டாள் ஆகிறான்”.
நமது சிந்தனைக்கும் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது முட்டாள்தனமான எண்ணங்களே முட்டாள்தனமான செயலாக வெளிப்படுகின்றன. எனவே, நமது முட்டாள்தனம் வெளிப்படாமலிருக்க வேண்டுமானால், அப்படிப்பட்ட எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். இதனை Meta Cognitive Regulation என்று சொல்வார்கள்.
சமூக விதிகளுடன் அனுசரித்துப் போகாமல் இருப்பது, தன்னைத்தானே அழித்துக்கொள்வது, தனது திறனை வெளிப்படுத்தாமல் இருப்பது ஆகியன இதனால்தான் உலகில் முட்டாள்தனமாகக் கருதப்படுகின்றன.
முட்டாள்தனம் அவமானமா?
ஒருவரை மோசமான வார்த்தைகளால் தூற்றுவதைவிட, முட்டாள் என்ற ஒரு சொல் அதிகமான கோபத்தை ஏற்படுத்தும். காரணம், நாம் அனைவருமே நம்மைப் புத்திசாலிகளாக நினைப்பதுதான். நமது முன்னோர்களிடம் இது வழக்கத்தில் இருந்ததா என்று தெரியவில்லை. ஏனென்றால், அப்போது உடல் உழைப்புக்குத்தான் மதிப்பு அதிகம். அதனால், யாரும் அறிவுக்கூர்மையைப் பெரிதாக எண்ணவில்லை. அதிலிருந்து விலகி மூளை உழைப்புக்குச் சமூகம் மதிப்பளிக்கத் தொடங்கியபோது, முட்டாள் என்ற சொல்லுக்கு வலிமை அதிகமானது.
முன்பு, வில்லை வளைத்தவருக்கும் காளையை அடக்கியவருக்கும் பெண் தந்தார்கள். இன்று, ஐடியில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறாரோ, அவருக்குப் பெண் தருகிறார்கள். முன்பு பலசாலியைக் கொண்டாடினார்கள். இன்று நாம் புத்திசாலியைக் கொண்டாடுகிறோம். கள்ளம், கபடம் போன்ற குணங்களோடு சூத்திரதாரியாக இருப்பவரைக் கொண்டாடும் காலமும் வரக்கூடும்.

மூளை வளர்ச்சியற்றவர்கள் 1950-60களில் சாதாரண பள்ளிகளிலேயே படித்துத் தேர்ச்சி பெற்றனர். தற்போது, அப்படிப்பட்ட குழந்தைகளைச் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
நம் அறிவுத் திறனைச் சார்ந்துதான் பொருளாதாரத் தேடலும் சமூக அந்தஸ்தும் நிர்ணயிக்கப்படும் எனும்போது, அறிவில்லாதவர்கள் என்று சிலர் வகைப்படுத்தப்படுகின்றனர். பிழைக்கத் தெரியாதவர்கள், ஒன்றுமறியாதவர்கள், வெற்று வேட்டு என்று விதவிதமான பெயர்களால் முத்திரைக் குத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் மனம் நொந்து குடிகாரர்களாகவும், மனநோயாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகின்றனர்.
முட்டாள் தினம் என்பது ஒரு கொண்டாட்டம். முட்டாள் தினத்தன்று, ஒருவரை முட்டாள் ஆக்கிவிட்டோம் என்று நினைப்பது ஆபத்தானதல்ல. ஆனால், மற்ற தினங்களிலும் மற்றவர்களை முட்டாளாக்க வேண்டுமென்று நினைப்பது ஆபத்தானது. முக்கியமாக, சில மனிதர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதில் அதிக ஆர்வம்காட்டுவார்கள்; அதைச் செய்தால் மட்டுமே, அவர்கள் நிம்மதியடைவார்கள். இத்தகைய Narcisstic Personality இருப்பது அபாயகரமானது.
இவர்கள், தன்னைத்தானே ரசிப்பார்கள்; தன்னைவிட புத்திசாலி உலகிலேயே இல்லை என்று நினைத்துக்கொள்வார்கள்; புத்திக்கூர்மை அதிகமுள்ளவர்களாக இருந்தால், சுற்றியிருப்பவர்களை முட்டாள் ஆக்குகிறோம் என்று வெளியே தெரியாத வகையில் அதைச் செயல்படுத்துவார்கள். ஒரு சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை முட்டாள்களாக நினைப்பது இந்த ரகம்தான்.
அறிவியல்பூர்வமாக ஒருவரை முட்டாள் ஆக்குதல் என்பது ஒருநாளில் கட்டமைக்கப்படும் விஷயமல்ல. பல ஆண்டுகளாக மனதில் உருவாக்கி வளர்த்தெடுத்த சதித்திட்டமாக இருக்கும். முட்டாள் ஆக்கப்படுவது என்பது உலகளாவிய பிரச்சினை.
ஃபேஸ்புக்கிலும் கூகுளிலும் இன்று பலரும் நம்மை முட்டாள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமலேயே, பல அறிவுஜீவிகள் சமூக வலைதளங்களில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். Psycho social behavioral algorithm என்பதை தனியாக உருவாக்கி, அதன் மூலமாகச் சமூக வலைதளங்களில் இருப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இன்று நடந்துவருகிறது. சமீபத்தில் நடந்த ஃபேஸ்புக் தகவல் திருட்டு சர்ச்சை இந்த ரகம்தான். இதன் மூலமாக, உங்களுக்கு யாரை, எதைப் பிடிக்க வைக்கலாம் என்பது, இன்னொருவரால் அறிவியல்பூர்வமாகத் திட்டமிடப்படுகிறது. அரசியல் தேடல் முதல் அந்தரங்க ஆசைகள்வரை இதில் உண்டு.
நமது முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி, நம் செயல்பாடுகளையே முற்றிலுமாக முடக்குவது அல்லது வேறு திசையில் திருப்பும் வேலை இது. அதேபோல, சந்திரனில் முதலில் கால் வைத்தது யார் என்ற விவாதம் இப்போது வரை நடக்கிறது. இந்த விஷயத்தில் ஒரு நாடே மற்ற நாடுகள் அனைத்தையும் முட்டாள் ஆக்கியதாகச் சொல்கின்றனர் சிலர்.
முட்டாள்தனத்துக்குச் சிகிச்சை பெற வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒருவர் திரும்பத் திரும்ப முட்டாள்தனமாகச் செயல்படுகிறார் என்றால், அவர் மனநல சிகிச்சைக்கு உட்படுவது நலம். இயல்பு தவிர வேறு காரணங்கள் இருந்தால், இதன் மூலமாகச் சரிசெய்யப்படும் வாய்ப்புள்ளது.
எது முட்டாள்தனம் என்பதை, இன்றைய உலகில் யாராலும் வரையறுக்க இயலாது. ஏனென்றால், ஒருவரது அறிவார்ந்த பார்வைகூட இன்னொருவரால் முட்டாள்தனமாகக் கருதப்படலாம். தான் நினைப்பது அனைத்தும் சரி என்று நினைப்பவன் முட்டாள். நான் நினைப்பது ஏன் சரியாக இருக்கக் கூடாது என்று கேள்விக்குப் பதில் காண முயல்பவன் புத்திசாலி.
நாம் புத்திசாலியாக இருக்கிறோமா அல்லது முட்டாளாக இருக்கிறோமா?
இந்தக் கேள்விக்குப் பதில் காணும் வரை மற்றவரை முட்டாளாகக் கருதாமல் இருப்பது உத்தமம்.

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.



No comments:

Post a Comment