- டாக்டர் சுனில் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் உதவியுடன் நாச்சியாள் சுகந்தி
‘ஒரு பெண், ஆணைக் காதலிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கொல்லும் போக்கு தமிழகத்தில் தினம் ஒரு நிகழ்வாக நடந்து கொண்டிருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்’ என்கிறார் டாக்டர் சுனில். ஆமாம், 90-களுக்கு முன்பான தமிழ் சினிமாகளில் காதல் தோல்வி என்றால் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாட்டுப் பாடும் ஹீரோக்களைத்தான் சினிமா அதிகம் காட்டியது. காதல் தோல்வியடைந்த ஹீரோ, அதிகபட்சமாக சோகமான முகத்துடன் தாடியுடன் வலம் வருவார். ஆனால், தற்போது வரும் படங்களில் ஹீரோ என்று திரையில் காட்டப்படுபவர் தன்னை பொறுக்கியாகவும், வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரிபவர்களாகவுமே காட்டப்படுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும், இவர்கள் விரும்பும் பெண் அவர்களை உடனடியாகக் காதலிக்க வேண்டும். அப்படி காதலிக்கவில்லை என்றால், ‘அடிடா அவளை… வெட்டுறா அவளை’ என்று பாடுபவர்களை ஹீரோக்களாக கொண்டாடுகிறோம். இந்த மாதிரியான சினிமாக்களும் தொலைக்காட்சி தொடர்களும் திரும்பத் திரும்ப ஒரு சமூகத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அதை பார்க்கும் இளைஞர்களுக்கு, ‘நாமும் இப்படி வாழலாம்’ என்கிற எண்ணம்தான் மேலோங்கும் என்கிறார் டாக்டர் சுனில். ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் மனித வாழ்வை செம்மைப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். ஆனால், இங்கு பெரும்பாலான கலை படைப்புகள் வன்முறையைக் கொண்டாடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆக சினிமா, நாடகங்கள் உள்ளிட்ட கலைப் படைப்புகளுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை படைப்பாளிகள் உணராத வரையில், அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
சரி, ஒரு ஆண் ஏன் காதலை மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறான் என்ற கேள்விக்கு, அந்த ஆணுக்குப் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பால், அவள் மீது அளவற்ற ‘பொஸசிவ்னஸ்’ உண்டாகிறது. அவள் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் மூளையில் ஊறிவிடுகிறது. ‘எனக்கு மட்டும்தான் அவள்’ என்கிற எண்ணத்தில்தான் எல்லா சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. இந்த பொஸசிவ்னெஸ், ‘அய்யோ அவள் நமக்குக் கிடைக்க மாட்டாளோ’ என்கிற பயத்தைக் கொடுக்கிறது. அந்த பயம், இவள் நம்மை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. அந்த சந்தேகம், அவனை சதா அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். அதன் உச்சம், அடக்க முடியாத கோபமாக மாறும். அந்த கோபத்தில் அவளை அணுகும் போது அவள் மறுப்பு சொன்னால், அது வன்மமாக மாறிகிறது. பயம், கோபமாக மாறி, வன்மமாக மாறும் இடம்தான் மிகவும் அபாயகரமானது. வன்மத்தில் சிலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். சிலர், அதீத மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு, மிருகத்தனமாக மாறி, அடுத்தவரை அழிக்கத் தொடங்குகின்றனர். அது கொலையில் முடிகிறது. ‘எனக்குக் கிடைக்காதவள் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்கிற ஆணின் ஈகோதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்’ என்கிறார் எழுத்தாளர் வா. மணிகண்டன்.
காதல் என்பது உணர்வுப்பூர்வமான விஷயம் என்ற மெல்லுணர்வு சமூகத்தில் இருந்து தேய்ந்து வருகிறது. காதல் என்பது காமத்துக்காக ஒரு பெண்ணை அடையும் வழி என்றே இன்றைய இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்கிறார் சுனில். இதற்குக் காரணம், இதைப் பற்றி பருவ வயதில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. முன்பு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீட்டில், பருவ வயதில் இருப்பவர்களிடம் பெரியவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் காதல், ஆண் பெண் உறவு, செக்ஸ் என வாழ்வின் முக்கியமான விஷயங்களையும் குறித்து பேசுவார்கள். ஆனால், தனிக் குடும்பம் பெருகிவிட்ட சூழலில், வளரும் பிள்ளைகளிடம் இதைப் பற்றி வீட்டிலோ, கல்லூரியிலோ யாரும் பேசுவதில்லை. அவர்கள் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கும் ஒரே மீடியம் டிவி, சினிமா என்றாகிவிட்டது. இதுவும் இந்த சிக்கல்களுக்குக் காரணம்.
இது உளவியல்ரீதியான காரணம். ஆனால், ஒரு சமூகத்தில் அச்சுறுத்தும் கொலைகள் நடக்கும்போது அதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்த சமூகத்தில் பின்பற்றப்படும் ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடு எல்லாம் முக்கியக் காரணம். இன்றைய வாழ்வில், ‘உனக்கு என்ன வேண்டுமோ, அதைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்’ என்கிற சுயநலப் போக்குதான் அதிகமாக உள்ளது. இந்த சுயநலப்போக்கு, ஒரு சமூகத்தின் மொத்த ஆன்மாவையும் அன்பு, கருணையின்றி அழிக்கும். இந்த சுயநலப் போக்குதான், ‘நான் விரும்பிய பெண்ணை அடைவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்ற சிந்தனையை வளர்த்தெடுக்கிறது. அடுத்து, இங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை. சட்டம் ஒழுங்கு மிகத் தீவிரமாக பின்பற்றப்படும் நாடுகளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் எழவே எழாது. ஆனால், தமிழ்நாட்டில் வருடத்துக்கு, காதல் என்ற பெயரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கும்போதும், அதை ஒடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பது துயரம்தானே? இந்த நிகழ்வுகள் குறித்து காவல்துறை அமைச்சர் ஜெயலலிதா இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது, மக்கள் மீதும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. இம்மாதிரியான தலைமைக் கூட இப்பிரச்னை பூதகரமாக வெடிப்பதற்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சரி, இந்த நிலையை மாற்ற வழியே இல்லையா? இந்த நிலையை சரி செய்ய பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் அவர்கள் வளரிளம் பருவத்தில் இருகும்போது, காதல், ஆண் பெண் உறவு குறித்து பேசுவதுதான் சரியான தீர்வு என்கிறார் டாக்டர் ஜெயசுதா காமராஜ்.
தங்கள் பிள்ளைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கிறதா என்று பெற்றோர் கண்காணித்து, அதற்கு சரியான சிகிச்சையை பெற்றோர்தான் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மிகப்பெரிய பொறுப்பு கல்வி நிறுவங்களுக்குத்தான் இருக்கிறது. மாணவர்களை படிப்பு, மார்க் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே வழிநடத்துவதால், வாழ்வதற்கான வழிமுறைகளை மாணவர்கள் பள்ளியில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்கிறார் டாக்டர் ஜெயசுதா. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் பிராய்லர் கோழிகளாக நடத்தும் மனப்போக்கு அதிகம் இருக்கிறது.
பள்ளிகளில் கட்டாயம் ‘Life skill training’ நடத்தப்பட வேண்டும். அதில் முக்கியமாக பத்து விஷயங்கள் சொல்லித் தரப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதில், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், மற்றவர்களுடன் பேசும் திறன், உறவுகளைப் பேணும் திறன், மன அழுத்தத்தை கையாளும் திறன், சுயமரியாதையை வளர்த்தெடுக்கும் திறன், மற்றவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் திறன், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் உள்ளிட்ட பத்து திறன்களை வளர்க்கும் பொறுப்பு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இருக்கிறது. ஆனால், நம் கல்விமுறையே மதிப்பெண் என்கிற சிறு வட்டத்துக்குள் அடைந்து கிடப்பதால், வாழ்க்கை என்னும் பெரிய வட்டத்தை ஆளும் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க மறந்து விடுகிறார்கள் என்பதை விட அதைப் பற்றி சிறிதளவு கூட யோசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இத்தனை பெண்கள் வன்முறையாக கொல்லப்பட்ட பிறகாவது, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துவது அவசியம். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நாட்டில், அமைதியும் செல்வமும் ஒருபோதும் நிலைக்காது என்பது வரலாற்று உண்மை. என்ன செய்யப் போகிறோம் நீங்களும் நானும் அரசும்?!
https://minnambalam.com/k/1472754655