CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Thursday 14 December 2017

Manam Yennum mayakkannadi (Tamil Article No. 10)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 10

முருகனை மனநல பாதுகாப்பகத்துக்கு அழைத்து வந்ததன் நோக்கமே அவன் வெளியே இருந்தால் யாராவது அவனைக் கொலை செய்துவிடுவார்கள் என்பதே ஆகும். எந்தவிதமான கொலை வழக்கும் அவன்மீது இல்லை. ஆனால், அவனுக்குக் கஞ்சா மற்றும் குடிப் பழக்கங்கள் இருந்தன.
முருகனின் மேல் நாற்பத்தைந்து வழக்குகள் உள்ளன. இதில் செயின் பறிப்பு வழக்குகள் அதிகம். இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் அவன் நண்பர்களும் நண்பர்களோடான பழக்கமும்தான். முருகனின் அப்பா ஒரு கவுன்சிலர். அம்மா வேலைக்குப் போகவில்லை. ஒரே தங்கை. நண்பர்களோடான பழக்கம் கஞ்சா பழக்கத்துக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறான். சிறு வயதிலிருந்தே யார் பேச்சையும் கேட்காமல் வளர்கிறான்.
முருகன் யார் என்று யோசித்தால் அது ஹாசினியையும் தன் சொந்த அம்மாவையும் கொலை செய்த தஸ்வந்த் போன்ற ஒருவன்தான். இவ்வகையான மனநிலைக்குப் பெயர், சமூக விரோத எதிர் குணாதிசயம். இதை வலியுறுத்த பெரும் ஆராய்ச்சிகள் நடைப்பெறாத போதிலே ஒரு குற்றவாளியின் மூளையைப் பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவனது மூளை மற்ற சாதாரண மனிதர்களின் மூளையைக் காட்டிலும் வித்தியாசப்படுவதை மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதிலிருந்தேதான் குற்றவாளிகள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா என்ற பட்டிமன்றமே உருவானது.
அதன் பிறகுதான் குற்றம் என்பதே மரபணுக்களால் ஏற்படும் பாதிப்பு என்னும் வாதம் உருவாயிற்று. அதாவது ஒரு குற்றவாளியின் மகன் குற்றவாளியாகவே இருப்பான், ஒரு வாத்தியாரின் மகன் வாத்தியாராகவே இருப்பான் என்னும் நம்பிக்கை சார்ந்த புரிதல் பேசப்பட்டது. இது எதுவுமே தீர்மானமான ஒரு முடிவைத் தரவில்லை என்பதே உண்மை. ஒரு வாத்தியாரின் குழந்தை குற்றவாளியாகச் சமூகத்தின் முன் நின்ற போதான நொடியில் இந்தத் தீர்மானமின்மை கிளைவிட்டது.

இப்படி மூளை நோயியல் அல்லது மரபணுவால் ஏற்படும் பாதிப்புகள் மருத்துவ ரீதியாக ஒரு செயற்பாட்டு காரணத்தைக் கொடுப்பதால் பொதுவான ஒரு தீர்மானமே கிட்டியதால் மூளையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடந்தன. அதில் மூளையிலிருக்கும் ஒரு பகுதி நம் மனத்தூண்டுதலைக் கையாள்கிறது என்பது குறிக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சமூகக் குடும்ப மன சூழல் காரணமாக இந்த தூண்டப்படும் புள்ளி வேறுபடுவதாகச் சொன்னார்கள். ஒரு கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்லும் செய்கைகூட இத்தகைய தூண்டுதலில் இருந்து கிளர்ந்தோடுவதுதான். இதுபோன்ற தூண்டுதல்கள் மிதமிஞ்சிப் போகும்போது அது சமூக விரோத எதிர் குணாதிசயம்.
முருகனைப் போலவே சிறுவயதிலிருந்தே யார் சொல்வதையும் எதையும் கேட்க மறுக்கும் தூண்டுதல் மனோபாவம்தான் பிற்காலத்தில் இந்தச் சமூக விரோத குணாதிசயத்தை அதிகரிக்க வைக்கிறது என்பதே அடிப்படையான புரிதலாகவும் தீர்மானமாகவும் கொள்ளப்பட்டது
இதன் நீட்சியாக ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றவாளியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வீடற்றவர்கள், சிறுவயதில் வன்முறையைப் பார்த்தவர்கள், சிறு வயதில் உடல் வன்முறையை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய உளவியல் ரீதியிலான தூண்டுதலுக்கு உள்ளாவதுண்டு. அதுவே சமூக விரோத குணாதிசயத்தைத் தூண்டுகிறது. ஏன் வன்முறை செலுத்தப்பட்டவர் வன்முறையாளராக ஆகிறார் என்றால் அதற்கான காரணம் உடல் அதிகாரத்தால் கிடைக்கும் சக்தியை எதிர்மறையாக அனுபவித்திருக்கிறார் என்பதால் மட்டுமல்ல. இந்தச் சமூகத்தையே அவர் பழி தீர்த்துக்கொள்ளும் செயலாக நினைக்கிறார் என்பதே உண்மை.

எப்போது தனக்கு அங்கு ஒரு பாதுகாப்பு ,அங்கீகாரம் இல்லை என்று உணர்கிறார்களோ, அப்போது அவர்கள் யார் மீது அதிகாரத்தை, வன்முறையை செலுத்துகிறார்களோ அவர்கள் சமூகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இதுதான் ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானங்களை இயற்றுகிறது. இஸ்லாமியர்கள் மீதான சமூக விரோத கண்ணோட்டம் இங்கிருந்து கிளை விடுவதுதான். இப்படி மன அரசியலின் பின்புலத்தில் உலகலாளவிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனத்தை ஒடுக்கப்படும் முயற்சிகள் நிகழ்கிறது.
ஒடுக்கப்பட்டோர் குற்றவாளியாக இருப்பார்கள் என்னும் நிலைப்பாடு எப்படி உண்மையாக இருக்க முடியும். ராயபுரத்தில் பட்டாக்கத்தி எடுத்து வெட்டுபவனும் மயிலாப்பூரில் கம்ப்யூட்டர் ஹேக் செய்பவனும் சம பங்கு குற்றவாளிதான்.
முருகனைப் போல் இவ்வகைக் குற்றவாளிகளின் சமூக விரோதத்தன்மை சிறுவயதிலிருந்தே சில சில அறிகுறிகளாகத் தெரியும். பின் பதின்ம வயதில் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, சினிமாவுக்குப் போவது, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுதன் மூலம் இந்த குணாதிசயம் வேர் ஊன்றும். சிறு வயதில் இதை நடத்தை சீர்குலைவு என்று சொல்வோம். இது வளர வளர சமூக விரோதத் தன்மையாக மாறுகிறது. ஒரு குழந்தை எதிர்வினையாக செயல்பட்டால் அதை முதலிலேயே மனநல ஆலோசகர்களிடம் கூட்டி வந்திருக்க வேண்டும். அதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இந்த மலை விழுங்கும் குணாதிசயத்துக்கு இரையாகிவிட வேண்டியது தான்.
பச்சாதாபம் அவர்களுக்குச் சுத்தமாக இருக்காது. அதேநேரம் தன்னிச்சையாய் தூண்டப்பட்டு சிறிதும் யோசிக்காமல் காரியங்கள் செய்வார்கள். முருகனும் அப்படியே போதைக்காகவும் ஜாலியான வாழ்வு என்று அவன் நினைத்திருக்கும் வாழ்வுக்காகவும் பின் விளைவுகளைச் சற்றும் யோசிக்காமல் திருட ஆரம்பித்தான். எப்போதும் திமிராகவே நடந்து கொள்வான். எந்தச் சட்ட திட்டமும் அவனுக்கோ அவன் வாழ்வுக்கோ இல்லை. யாருக்காகவும் மனம் இரங்கும் தன்மையிராது. பணத்துக்காக மட்டும் கேட்பது போல நடித்துவிட்டு பின் மனம் மாறுபவர்கள். எல்லாமே உடனே நிகழணும். ஒரே பாட்டில் அம்பானி ஆகணும் கதையாக தான் முருகனுக்கு இருந்திருக்கிறது.
நம் சமூகத்தின் அவலமே இப்படியான தனிமனித மன குணாதிசயங்களை அவனிருக்கும் இடம் வைத்தோ, சாதி, மதம் வைத்தோ பொதுப்படையாக பேசுவதன் மூலம் அந்த இடம், சாதி, மதம் குறித்த அடையாளம் ஒன்றை முத்திரையிடுவதுதான். அது போலவே இவர்களின் இத்தன்மையைச் சுய அரசியல் லாபங்களுக்காக குடும்பங்களிலும் அதேநேரம் சமூகத்திலும் பயன்படுத்தி அதிகாரங்களைத் தனக்குரியதாக்கிவிட்டு பின் இவர்களை மட்டும் சமூக விரோதிகளாக அடையாளம்காட்டி இவர்களை அழிப்பதும் சமூகம்தான். ஆக, இவர்களை உருவாக்குவதும் அழிப்பதும் சமூகம்தான். இந்தச் சமூக உளவியல் சிக்கலை ஆராய்ந்தோமானால் நமக்குப் புரிபடும் முக்கியமான விஷயம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஒடுக்குமுறைகளும் பொருளாதார ஏற்றதாழ்வுகளுமேதான்.
எங்கு, எப்போது நீதி தன் கடமையைச் செய்யவில்லையோ அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து இப்படி ஒரு சமூக விரோத எதிர் பிரதிநிதித்துவம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, முருகன் என்பவன் முருகன் மட்டுமல்ல; முருகனுக்கான சிகிச்சை என்பது முருகனுக்கானது மட்டுமல்ல; இந்த சமூகத்துக்கானதாக இருக்க வேண்டாம். ஒட்டுமொத்த சமூகத்தின் உலவியல் தன்னிச்சை செயல்பாடுகளிலும் ஒற்றை மனிதனை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் உடனடியாக மாறிவிடாது. இது ஒரு சமூக மாற்றத்தின் பிம்பமாக மட்டுமே பிரதிபலிக்க வேண்டியது.

நம் கல்வி திட்டங்களில் மாற்றங்கள், காவல் துறையில், பள்ளி ஆசிரியர்களில் உணர்திறனை கூராக்குவதன் மூலமே இது சாத்தியப்படும். நீதித் துறையும் இதில் உள்ளடக்கமே. சிறை என்பதன் அர்த்தம் குற்றவாளி மனம் மாறுவதுதான். ஆனால், அந்த மாற்றம் நிகழ்வதற்கான மாற்றம் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. சிறையும் மனநல காப்பகங்களும் அதனால் ஒன்றாகவே இருக்கிறது. சமூகத்தால் சமாளிக்க இயலாதவர்களின் கூடாரமாகவே இவை அமைந்திருக்கிறது. சிக்கல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டறியாமலே ஓர் உதிரி சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மேலும் சிக்கலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.
முருகனைப் போல சமூக விரோத குணாதிசயம் கொண்ட மனிதர்களால்தான் பெண்களுக்கு உடல் வன்முறையும் நிகழ்கிறது. அவர்களின் காம உணர்வு இடம், பொருள், பின் விளைவு எதையுமே பார்ப்பதில்லை.
முருகனை மொத்தம் ஆறு பள்ளிகளில் வெவ்வேறு பிரச்னைகளால் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார் அவர் அப்பா. அப்போதே முருகனுக்கு மனநல உதவி தேவைப்பட்டிருக்கிறது, அத்தகைய சிறு வயது கண்டுணர்தலும் ஆலோசனையும் முருகனை மீட்டிருக்கக் கூடும். முருகன் அதன்பின் வீட்டுக்கு வராமலும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலும் நாள்கள் நகர்ந்தன. அவனை வேறு சிலர் கொலை செய்ய முயற்சிக்கும்போதே அவன் குடும்பத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது.
ஹாசினியைக் கொன்றவனின் நிலமையும் இதுதான். ஹாசினியைக் கொன்றபோது அவனை ஜாமீனில் எடுக்க வீட்டையெல்லாம் விற்ற அவன் அம்மா அப்பாவையே கொலை செய்ய எண்ணும் அவனது சமூக விரோத மனம் தன்னிச்சை செயல்பாடுகளால் உந்தித் தள்ளப்பட்டதே. அதற்கு நன்றி பாராட்டுதலோ, மனித மாண்புகளோ கிடையாது. இக்குணாதிசயமே சமூக அநீதிகளுக்குட்படும்போது சமூக விரோத செயல்களாக உருவெடுக்கிறது.
ஆக, முருகனை சிகிச்சையின்பேரில் அவனது தன்னிச்சையான உணர்வை கோர்வைப்படுத்த முயல்வதே அவனை மீட்கும் முயற்சி. ஆனால், அது நூறு சதவிகித வெற்றியாகுமா என்பதை உறுதியளிக்க முடியாது. தன்னிச்சை கட்டுப்பாட்டுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதன் மூலம் மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்ளலாம். சமூகத்தின் நேர்மையற்ற ஏற்றதாழ்வுகளை சரி செய்தாலன்றி நம்மில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முருகன்கள் மனநலத்துடன் இருப்பது சிரமமே.

Dr. Sunil Kumar                                                  Dr. Jayasudha Kamaraj
Clinical Psychologist                                           Counseling Psychologist
Founder - Mind Zone                                           Co-founder, Mind Zone

No comments:

Post a Comment